‘கிங் 100’ படத்தில் கர்ணாவாக அசோக் செல்வன்!

Web Ads

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வன்.. ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் 100-வது திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘கிங் 100’ (King 100). ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ர. கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். அவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து பல திறமையான நடிகர்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில், இப்படத்தில் ‘கர்ணா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அசோக் செல்வன் இந்த போஸ்டரில் காட்சியளிக்கிறார். ஸ்டைலான மெரூன் நிறச் சட்டை, நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி என வித்தியாசமான தோற்றத்தில் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். அவரது கையில் சிகரெட், அருகில் அலட்சியமாக வைக்கப்பட்டுள்ள காவல்துறை சீருடை மற்றும் முன்புறத்தில் ‘கிங்’ சதுரங்கக் காயுடன் கூடிய செஸ் போர்டு எனப் பல சுவாரசியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Web Ad 2

மேலும், புகை மூட்டத்துடன் கூடிய இருண்ட பின்னணி அவரது கதாபாத்திரத்தின் மர்மத்தையும் தீவிரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் புதிய அவதாரம் படத்தில் அசோக் செல்வனின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். N. சதீஷ்குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.

நாகார்ஜுனா, தபு, அசோக் செல்வன் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள ‘கிங் 100’ திரைப்படம், அதன் அடுத்தடுத்த புரமோஷன்கள் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.