ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கும் பொலிமேரா 3 முதல்பார்வை வெளியீடு

Web Ads

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்த ‘பொலிமேரா’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகமாக ‘பொலிமேரா 3’ உருவாகி வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஏற்றுள்ள ‘வீராவி’ கதாபாத்திரத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் வம்சி நந்திபாடி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்) சார்பில் பரத் நரங் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இருள் சூழ்ந்த கோயிலின் பின்னணியில் தொடங்கும் காட்சிகள், அமாவாசையின் மர்மமான சூழலைப் படிப்படியாக வெளிப்படுத்துகின்றன. மகாவிஷ்ணு, சிவபெருமான், அனந்த பத்மநாப சுவாமி ஆகியோரின் ஆன்மிகத் தரிசனங்களுடன், மர்மம் மற்றும் அமானுஷ்யம் கலந்த வித்தியாசமான உலகத்தை இந்த க்ளிம்ப்ஸ் அறிமுகப்படுத்துகிறது.

Web Ad 2

மேலும், சத்யம் ராஜேஷ் கொமரையா என்ற கதாபாத்திரத்தில் மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபடும் காட்சிகள் படத்தின் மர்மத்தையும் பரபரப்பையும் அதிகரிக்கின்றன. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் அறிமுகம் இடம்பெறுகிறது. ‘வீராவி’ என்ற கதாபாத்திரத்தில் வாளேந்தியபடி கம்பீரமாகத் தோன்றும் அர்ஜுனின் அனல் பறக்கும் பார்வையும், மிடுக்கான உடல்மொழியும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இதுவரை அவர் ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிருஷ்ண பிரசாத் இசையமைக்கிறார். டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொலிமேரா 3’ திரைப்படம் விரைவில் நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.