லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ரெஜினாவின் ‘ஆர்எக்ஸ்’ படத்தின் போஸ்டர் வெளியீடு

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘RX’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, நடிகர் நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தெலுங்கில் ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தலம், உபென்னா, புஷ்பா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள இந்நிறுவனம், பிரம்மாண்டமான படைப்புகளுக்கும் வலுவான கதைக்களங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தெலுங்கு மட்டுமின்றி பிற மொழிப் படங்களையும் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவிலும் தடம் பதித்துள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து ‘RX’ திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்தக் கூட்டணி புதிய திறமையாளர்களுக்கும் புதுமையான கதைகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இரு நிறுவனங்களின் தயாரிப்பு அனுபவம், படைப்புச் சுதந்திரம் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஒன்றிணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘RX’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் நடிகர் நாசர் ஆகியோர் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘Truth Always Demands a Voice!’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எந்தத் தகவலையும் வெளிப்படுத்தாமல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷாமீரா ஐயப்பன் வசனம் எழுதியுள்ளார். ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் சென்னையில் நிறைவடைந்துள்ளது.
தொழில்நுட்பக் குழுவில் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பாளராகவும், எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவாளராகவும், ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பாளராகவும், கே. மனோஜ் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்கும் இப்படம், ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. பிரதீப் பூபதி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
‘RX’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
