எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன்… தயாரிப்பாளர் கண்ணன் ரவி அதிரடி பேச்சு!

Web Ads

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ஜாம்பி ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி மேற்கொள்ள, கலை இயக்கத்தை டான் பாலா கவனித்துள்ளார். கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்க, தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வரும் இப்படத்தின் விளம்பர நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இயக்குநர் சாம் ரோட்ரிகஸ், படத்தொகுப்பாளர் ஆண்டனி, நடிகைகள் அனு கீர்த்தி, யாவீ, நடிகர் பீட்டர், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வரூபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில்,

“பல தயாரிப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், கண்ணன் ரவியுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். படத்தொகுப்புப் பணிகளை முடித்த பிறகு, படத்தைப் பார்க்க சென்னைக்கு வருமாறு அவரை அழைத்தேன். ஆனால், அவர் துபாய்க்கு வருமாறு கூறினார். அங்கு சென்றபோது இரண்டு வாரங்கள் ஓய்வெடுத்துவிட்டு படத்தைத் திரையிடலாம் என்றார். பின்னர் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்ததுடன், சிறப்பாக விளம்பரப்படுத்துவதாகவும் தெரிவித்தார். அவருடைய இந்த அர்ப்பணிப்பிற்காகவே இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்” என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் ஸ்வரூபா பேசுகையில்,

“இது என்னுடைய முதல் திரைப்படம். இதில் நடிகர், நடிகைகளுக்கான ஆடை வடிவமைப்பு முழுவதும் இயக்குநரின் சிந்தனையில் உருவானது. அவருடைய குழுவினருடன் இணைந்து பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து, கலந்துரையாடிய பின்னர் அவரது வழிகாட்டுதலின்படி ஆடைகளை வடிவமைத்தேன்” என்றார்.

இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் பேசுகையில்,

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற தீபாவளி நிகழ்வில் மேடை ஏறினேன். தற்போது மீண்டும் தீபாவளிக்கு முந்தைய நாளில் ‘பேங் பேங்’ படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தயாரிப்பாளர் கண்ணன் ரவிதான் தற்போது பேசுபொருளாக இருக்கிறார். அவரைப் பற்றி பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவரை விமர்சிக்கிறார்கள். இதுகுறித்த தெளிவான விளக்கத்தை அவர் இந்த மேடையில் வழங்குவார் என எதிர்பார்க்கிறேன்.

1990-களில் துபாய் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து அங்கு சென்ற பலரில் கண்ணன் ரவியும் ஒருவர். துபாயின் வளர்ச்சியுடன் அவருடைய வளர்ச்சியும் அமைந்தது. வெளிநாடுகளில் வசதியான வாழ்க்கையைப் பெற்ற பிறகும், தாய்நாட்டையும் சொந்த ஊரையும் மறக்காமல், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகச் சிலர்தான்.

ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவைப் போலவே, கண்ணன் ரவியும் தான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரிடம் பேசும்போதெல்லாம் ‘நம்ம தமிழ் சினிமா’ என்றுதான் குறிப்பிடுவார். தமிழ் சினிமாவில் செயல்படும் பல்வேறு சங்கங்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார்.

படத்தைப் பற்றிய விரிவான தகவல்களை வெளியீட்டுக்கு முன்பான நிகழ்வில் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் படத்தில் வடிவேலு, பிரபுதேவா இருவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்” என்றார்.

நடிகை அனு கீர்த்தி பேசுகையில்,

Web Ad 2

“தமிழில் நான் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. வடிவேலு, பிரபுதேவா போன்ற சாதனையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

வெளிநாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்கும் வாய்ப்பு பல கலைஞர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ‘பேங் பேங்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,

“அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சொந்த ஊர் மக்களுடன் கொண்டாடி வருகிறேன். அந்த நாட்களில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து மகிழ்வதும் வழக்கம்.

நாம் சம்பாதிப்பதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மக்களுக்காகச் செலவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அதனால்தான் இன்றுவரை எனது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை மக்களுக்காக ஒதுக்கி வருகிறேன்.

பிரபுதேவா என்னைச் சந்தித்து, ஒரு புதிய இயக்குநர் ஜாம்பி கதையுடன் வந்திருப்பதாகவும், கதையைக் கேட்டு வாய்ப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். கதையைக் கேட்டவுடன் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் சாம் நிச்சயம் அடுத்த கட்டத்திற்குச் செல்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் புதிய இயக்குநராக இருந்தாலும், அவருடன் திறமையான கலைஞர்கள் பலரும் இணைந்திருந்தனர்.

வடிவேலு, பிரபுதேவா இருவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அனைத்துக் கட்டங்களிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் நிச்சயம் பேசப்படும்.

இந்தோனேசியாவில் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற யோசனையை முதலில் நான்தான் முன்வைத்தேன். கடந்த 20 ஆண்டுகளாக வெடிக்காத அந்தத் தீவில் இருந்த எரிமலை, படக்குழுவினர் அங்கு சென்றிருந்தபோது வெடித்தது. அந்த நிகழ்வையும் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். நானும் எரிமலையைப் போன்றவன்தான். எப்போது வேண்டுமானாலும் வெடிப்பேன். ஏனெனில், கோபம், அன்பு, பாசம் என அனைத்து உணர்வுகளும் கொண்ட ஒரு சாதாரண மனிதன்தான் நான்.

இந்தப் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். படத்தில் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும், படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். நான்கு பேருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

இது ஜாம்பி கதையாக இருந்தாலும், ரசிகர்கள் டிக்கெட் வாங்கிப் பார்க்கும் கோணத்தில் சில மாற்றங்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்தேன். இயக்குநரும் படக்குழுவினரும் அதை ஏற்றுக்கொண்டு சிறப்பான படைப்பாக உருவாக்கியுள்ளனர். உண்மையிலேயே இது ஒரு கூட்டுத் தயாரிப்பு. படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கண்ணன் ரவி தனது பின்னணி, தொழில் பயணம் குறித்து விரிவாகப் பேசினார். அண்மைக் காலமாக இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் தன்னைப் பற்றி வெளியாகி வரும் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தனது தரப்பு விளக்கங்களை நிதானமாகவும் தெளிவாகவும் முன்வைத்தார்.

மேலும், தனது எதிர்காலத் திட்டங்கள், அரசியலில் சினிமாவின் தாக்கம் மற்றும் அதன் சக்தி குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.