நம் வாழ்க்கை வரம்தான்.. பத்தா வெற்றியில் நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

Web Ads

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அக்டோபர் 1-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’.

சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அட்லீ வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஆக்ஷன் படமாகத் தொடங்கி, மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக நகரும் ‘பத்தா’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றதுடன், திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து, படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் சார்பில் ‘சக்சஸ் மீட்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டு காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும். நீங்கள் மலர்ந்த முகத்துடன் வரும்போது எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “‘பத்தா’ படத்தை தங்கள் படமாக நினைத்து ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் படத்தை எடுத்துச் சென்று, மற்றவர்களுக்கும் பரிந்துரைத்து வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது நம் வாழ்க்கை ஒரு வரம் என்பதை நினைவுபடுத்துகிறது” என்றார்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் குறித்து பேசிய விஜய் சேதுபதி, “அவர் இயக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’, ‘பத்தா’ என மூன்று படங்களுமே அற்புதமானவை. அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதை நிரூபித்தவர்” என்று பாராட்டினார்.

மேலும், ‘பத்தா’ படத்தில் நடித்த சிறுவன் சாய் பிரித்வி ராஜை பாராட்டிய விஜய் சேதுபதி, “அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் கிடைத்த புகழால் அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. நன்றாகப் படிக்க வேண்டும்” என்று வாழ்த்தினார். லிஜோமோல் ஜோஸ், சாய் அப்யங்கர் மற்றும் படக்குழுவினரையும் அவர் பாராட்டினார்.

Web Ad 2

இயக்குநர் அட்லீ பேசுகையில், தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். “நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். அதற்கு திமிர் என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறிய அவர், தனது திரைப்பயணத்தில் சந்தித்த விமர்சனங்கள் குறித்தும் பேசினார்.

மேலும் விஜய் சேதுபதியைப் பாராட்டிய அட்லீ, “அவர் நல்ல நடிகர் என்பதைவிட முதலில் நல்ல மனிதர். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். இன்று விஜய் சேதுபதி அண்ணாவை இந்தியா முழுவதும் தெரியும். அவரை மேலும் மேலே கொண்டு செல்வேன்” என்றார்.

தொடர்ந்து, கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் அட்லீ தெரிவித்தார்.

இசையமைப்பாளர் சாய் அப்யங்கரைப் பற்றிப் பேசிய அட்லீ, “அவர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், படத்தின் வெற்றியை மேலும் அதிகரிக்க மக்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு கோருவதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றும் கூறினார்.

படக்குழுவினர் அனைவரும் ‘பத்தா’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.