ஐஸ்வர்யா ராஜேஷின் “ஓ சுகுமாரி” படத்தின் டிரெய்லர் வெளியானது

Web Ads

டீசர் மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓ! சுகுமாரி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியை மையமாகக் கொண்ட முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ளார்.

வெளியான ட்ரெய்லர், ‘தாமினி’ என்ற இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. அவளைத் தொடுபவர்களுக்கு மின்சாரம் தாக்குவது போன்ற அதிர்ச்சி ஏற்படுவதால், ஊரே அவளைப் பார்த்து அச்சப்படுகின்றனர். இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்து, குடும்பத்தினர் அவளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு அந்த உண்மையை அறியும் நாயகன் சந்திக்கும் சிக்கல்களும், புதுமண தம்பதியினரின் கலகலப்பான பயணமும் கதையின் மையமாக அமைகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையை அவர்கள் எவ்வாறு சமாளித்து காதலையும் மகிழ்ச்சியையும் கண்டடைகிறார்கள் என்பதையே படம் சுவாரஸ்யமாக சொல்லுகிறது.

இயக்குநர் பரத் தர்ஷன், நகைச்சுவையுடன் உணர்வுகளையும் இணைத்து கதையை நகர்த்தியுள்ளார். கிராமத்து இளைஞராக திரு வீர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளையும் அழகையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் முரளிதர் கௌட், விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சி.ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கலை இயக்குநராக திருமலா எம். திருப்பதி, படத்தொகுப்பாளராக ஸ்ரீ வர பிரசாத் பணியாற்றியுள்ளனர்.

காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் வித்தியாசமான கதைக்களம் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள ‘ஓ! சுகுமாரி’ திரைப்படம், வரும் ஜூலை 17 முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.