சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, படத்தின் கதைக்களம் குறித்த கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் மேலும் இரண்டு புதிய போஸ்டர்களை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், தனது சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வழங்குகிறார். நல்ல கதைகளை ஆதரித்து வரும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஷான்ஜன் ஜி இணை தயாரிப்பாளராக உள்ளார்.
‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.எஸ். சினிஷ், பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’, தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை வழங்கியுள்ளார். அந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகி வருகிறது.
வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் தனித்த அடையாளம் பெற்ற அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாகவும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர் நடித்திருப்பது படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
‘லோகா – சாப்டர் ஒன்’, ‘பரிமளா & கோ’ உள்ளிட்ட படங்களில் கவனம் பெற்ற சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் இணையும் இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். முன்னதாக கே.எஸ். சினிஷ் இயக்கிய ‘பலூன்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், தனது தெளிவான கதை சொல்லும் அணுகுமுறையால் படக்குழுவினரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
புதிய இயக்குநர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், ‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் இயக்குநர் ராமையும் அறிமுகப்படுத்தியிருந்தார்.
‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ‘குஷி’, ‘ஹிருதயம்’, ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட படங்களில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹிஷாம், இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
