‘தர்மன்’ திரைப்படத்தால் எனது திரைப்பயணம் முழுமை பெற்றுள்ளது – நடிகை சிம்ரன்

Web Ads

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பு, அழகு மற்றும் அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். காலத்திற்கேற்ப தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த வாய்ப்பு குறித்து சிம்ரன் கூறியதாவது:

“சில கனவுகள் சரியான நேரத்தில் தான் நனவாகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவு. அது ‘பேட்ட’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் நிறைவேறியது. ஆனால், ‘தர்மன்’ படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பது என் திரைப்பயணத்தை முழுமையாக்கியுள்ளது.”

மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

அத்துடன், தனது நீண்டகால திரைப்பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் வழங்கி வரும் ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், “கேளுங்கள்… நம்புங்கள்… இந்த பிரபஞ்சம் நீங்கள் நினைக்காத விதத்தில் பதிலளிக்கும்” என்ற நம்பிக்கையுடன் இந்த புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக கூறினார்.

1997 ஜூலை 4 அன்று வெளியான ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் ‘வி.ஐ.பி.’ திரைப்படங்கள் மூலம் தமிழில் அறிமுகமான சிம்ரன், இன்று மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்கவைத்திருப்பது அவரது திறமைக்கும், காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கும் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.