ஜூன் 25-ல் வெளியாகும் ‘அந்தரன்’!

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘அந்தரன்’. ஜூன் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் பிரஜினுடன் இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரி எஸ்.ஆர் இசையமைத்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரித்துள்ளார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சி.வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி மற்றும் ‘விக்கல்ஸ்’ விக்ரம் கலந்து கொண்டனர்.
பேசிய ‘விக்கல்ஸ்’ விக்ரம், “பிரஜினின் வாழ்க்கையில் ‘அந்தரன்’ ஒரு திருப்புமுனைப் படமாக அமைய வேண்டும். அவர் நீண்ட காலமாக உழைத்து வருகிறார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியைத் தரும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகை இவானா வருண், “இது எனது முதல் திரைப்படம் என்பதால் மிகவும் சிறப்பானது. படக்குழுவின் அன்பும் ஆதரவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்” என்று கூறினார்.
இயக்குநர் சந்தோஷ் ராவணன், “தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆனால் அது வழக்கமான திரில்லர் அல்ல. ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்ற படங்களில் இருந்ததைப் போல ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அம்சம் கிளைமாக்ஸில் உள்ளது. கதையின் முக்கிய ரகசியத்தை படம் வெளியான பிறகு மட்டுமே பகிர முடியும்” என்றார்.
தயாரிப்பாளர் சி.வி. குமார், “படத்தை பார்த்துவிட்டேன். கடைசி வரை யூகிக்க முடியாத வகையில் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல உள்ளடக்கம் கொண்ட இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும்” என பாராட்டினார்.
தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம், “சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை கிரைம் திரில்லர் வடிவில் சொல்லியுள்ளோம். புதியவர்களின் படங்களுக்கு திரையுலகில் கூடுதல் ஆதரவு கிடைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் பிரஜின், “20 ஆண்டுகளாக ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையை மாற்றுமா என்ற நம்பிக்கையுடன் பயணித்து வருகிறேன். அந்த மாற்றத்தை ‘அந்தரன்’ கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் செலவிடும் நேரத்திற்கும் பணத்திற்கும் மதிப்பளிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.
கிரைம், மர்மம், காதல் மற்றும் சமூக கருத்துக்களை இணைத்து உருவாகியுள்ள ‘அந்தரன்’, ஜூன் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
