‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்தது இந்த கிராமம் தான்! – தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி

Web Ads

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்றிருந்த தேவி ஸ்ரீ பிரசாத், அங்கு நடைபெற்ற ஜாத்தாரா திருவிழாவில் கலந்து கொண்டு கிராம மக்களுடன் கொண்டாடிய அனுபவங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

திருவிழா நாட்களில் தனது பூர்வீக வீட்டில் தங்கி, ஊரின் பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் கலாச்சார உணர்வுகளை முழுமையாக அனுபவித்த அவர், அந்த நினைவுகளை பதிவு செய்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

“என் அப்பா பிறந்த ஊர் வேதுருபாகா. சிறு வயதில் சென்னையிலிருந்து அடிக்கடி இங்கே அழைத்து வந்து இயற்கையின் அழகையும், நம்முடைய கலாச்சாரத்தையும் உணர வைத்தார்கள். நம்முடைய மக்களுடனும் பாரம்பரியத்துடனும் இணைந்திருக்க வேண்டும் என்பதற்காக இங்கே ஒரு அழகான வீடு கட்டியிருக்கிறோம். இந்த ஊர்தான் எனக்கு கலாச்சாரம், நாட்டுப்புறக் கலை மற்றும் தெய்வீகத்தின் அழகை கற்றுத்தந்தது. அதனால்தான் ‘எல்லம்மா’ படத்திற்கு உடனே சம்மதம் சொன்னேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ, தேவி ஸ்ரீ பிரசாத் தனது சொந்த ஊருடனும் மக்களுடனும் கொண்டுள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்துவதோடு, ‘எல்லம்மா’ திரைப்படத்தின் ஆன்மாவையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தில்ராஜு வழங்கும் இந்தப் படத்தை வேணு யெல்தண்டி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சிரீஷ் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ‘எல்லம்மா’ திரைப்படம் வெளியாக உள்ளது.