இது ஒரு அழகான ராம்-காம் படம் – நடிகை குஷ்பு!

Web Ads

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரொமான்ஸ் மற்றும் ஃபேண்டஸி கலந்த புதுமையான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படம், தமிழ் சினிமாவில் வித்தியாசமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பொன்னியின் செல்வன்’ மூலம் கவனம் பெற்ற சந்தோஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

கிரியேட்டிவ் புரடியூசர் ஆனந்திதா சுந்தர் பேசுகையில், “இந்த படக்குழு எனக்கு குடும்பம் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் இல்லையெனில் இந்த பயணம் சாத்தியமாகியிருக்காது. படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்த கனவுக்கு உயிர் கொடுத்துள்ளனர். கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

பகவதி பெருமாள் பேசுகையில், “இந்த கதையை முதலில் கேட்டபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அடுத்த தலைமுறைக்கான புதிய கதை சொல்லல் ஆரம்பமாகி இருக்கிறது என்று உணர்ந்தேன். சாம் சி.எஸ் இசையில் நடித்தது மகிழ்ச்சி” என்றார்.

ரேஷ்மா வெங்கடேஷ் பேசுகையில், “இது ஒன்றரை வருட பயணம். இயக்குநர் அஸ்வின் மிகவும் திறமையானவர். சந்தோஷ் முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். சாம்யுக்தா, வினோத் கிஷன் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்று கூறினார்.

சாம்யுக்தா விஸ்வநாத் பேசுகையில், “இந்த படம் எனக்கு மிகவும் முக்கியமானது. இயக்குநர் கதை சொன்ன முதல் தருணத்திலேயே இந்த படத்திற்குள் நான் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவருடனும் அற்புதமான அனுபவம் கிடைத்தது” என்றார்.

நடிகர் சந்தோஷ் பேசுகையில், “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த குஷ்பு மேடம், இயக்குநர் அஸ்வின் மற்றும் முழு குழுவிற்கும் நன்றி. சாம் சி.எஸ் இசையில் இது வித்தியாசமான படமாக இருக்கும். வினோத் கிஷன் இப்படத்தில் முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் பேசுகையில், “எனது குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகளின் போது கூட குஷ்பு மேடம் மிகுந்த ஆதரவாக இருந்தார். இந்த படத்தில் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.

இயக்குநர் அஸ்வின் கந்தசாமி பேசுகையில், “ஒன்பது வருடங்களாக சினிமாவில் இருந்தாலும், மேடையில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த படம் முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆக தொடங்கியது. பின்னர் சந்தோஷின் ஊக்கத்தால் திரைப்படமாக மாறியது. இந்த படத்தில் VFX காட்சிகள் அதிகம் இருக்கும். முழு குழுவும் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர்” என்றார்.

குஷ்பு பேசுகையில், “இது ஒரு அழகான ராம்-காம் படம். சமீப காலமாக இப்படியான கதையை நான் கேள்விப்பட்டதே இல்லை. சந்தோஷை அவ்னி மூவீஸில் அறிமுகப்படுத்துவது எனக்கு பெருமை. அஸ்வின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்த படம் மக்களை சிரிக்கவும், உணர்ச்சிவசப்படவும் செய்யும். திரையரங்கில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்” என்று கூறினார்.