ஜூலை 17-ல் ரிலீஸ் ஆகிறது ‘ஜி.டி.நாயுடு’

Web Ads

இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஆர். மாதவனின் புதிய திரைப்படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனுடன், படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். ‘இந்தியாவின் எடிசன்’ என்றும் ‘கோயம்புத்தூரின் செல்வ உருவாக்கி’ என்றும் போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயம் இந்தப் படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.

வெளியான புதிய போஸ்டரில் ஜி.டி. நாயுடுவின் தோற்றத்தில் முழுமையாக உருமாறியுள்ள மாதவன், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது அசத்தலான மேக்-ஓவர் மற்றும் கதாபாத்திரத்திற்கான அர்ப்பணிப்பு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் சாதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் ஊக்கமூட்டும் படைப்பாக இது உருவாகியுள்ளது.

மாதவனுடன் இணைந்து சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடவுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஸ்பிரிட் மீடியா, கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸ் மற்றும் வெளிநாடுகளில் ஏபி இன்டர்நேஷனல் விநியோகிக்கவுள்ளது.

படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன. உணர்வுபூர்வமான, ஊக்கமளிக்கும் மற்றும் மறக்கமுடியாத திரையரங்கு அனுபவத்தை வழங்கவுள்ள இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.