ஜான்சி கதாபாத்திரம் சவாலானது! – நடிகை துஷாரா விஜயன்

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் மே 15ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் ‘எக்ஸாம் – EXAM’ -இன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது.
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி இணைந்து தயாரித்துள்ள இந்த தொடரை தேசிய விருது பெற்ற இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கியுள்ளார். இதில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மொத்தம் 7 அத்தியாயங்களாக உருவாகியுள்ள இந்த தொடர், போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை மையமாகக் கொண்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. மே 15 முதல் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
விழாவில் படக்குழு பேச்சு:
தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், “சிறிய பட்ஜெட்டில் பெரிய வெற்றியைப் பெற முடியும் என்பதை இயக்குநர் சற்குணம் தனது ‘களவாணி’ படத்தின் மூலம் நிரூபித்தவர். ‘எக்ஸாம்’ கதை நீண்ட வடிவத்திற்கு ஏற்றதாக இருந்தது. ஒவ்வொரு அத்தியாயமும் ‘அடுத்து என்ன?’ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
இயக்குநர் காயத்ரி கூறுகையில், “ஒரு இணையத் தொடருக்கு தனியான எழுத்து முறை அவசியம். அந்த புரிதல் சற்குணத்திடம் இருந்தது. திறமையான நடிகர்களை தேர்வு செய்வதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். துஷாரா, அதிதி ஆகியோர் முதல் தேர்வாக இருந்தனர். அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்” என்றார்.
இயக்குநர் ஏ. சற்குணம் பேசுகையில், “போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டு, திரில்லர் அம்சங்களுடன் இந்தக் கதையை உருவாக்கினோம். ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்பு இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை தயாரிப்பாளர்கள் வழங்கினர். இந்தத் தொடர் எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.
நடிகை துஷாரா விஜயன், “ஜான்சி கதாபாத்திரம் சவாலானது. இந்தத் தொடரின் மீது முழு நம்பிக்கையுடன் இணைந்தேன். இந்தக் கதை கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.
நடிகை அதிதி பாலன், “மரமல்லி கதாபாத்திரம் எனக்கு புதிய அனுபவம். சண்டைக் காட்சிகளுக்காக கடினமாக பயிற்சி எடுத்தோம். இந்தக் கதாபாத்திரம் வித்தியாசமானது” என கூறினார்.
பரபரப்பும், சமூக உணர்வும் கலந்த ‘எக்ஸாம் – EXAM’ இணையத் தொடர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

