அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Web Ads

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’ – விரைவில் திரைக்கு!

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் நிலையில், தனது 28வது படைப்பாக ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார்.

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கூறுகையில், “ஒரு அன்பான குடும்பம்—தாய், தந்தை, மகள்—அவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒரு கொடூர கும்பல்… இவர்களுக்கிடையே நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே ‘பிளாஸ்ட்’ படத்தின் மையம். எல்லா தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இதை உருவாக்கியுள்ளோம். எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதும், அதில் அர்ஜுன் சார் போன்ற பெரிய நடிகரை இயக்குவதும் எனக்கு பெருமை,” என்றார்.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு, ‘கேஜிஎஃப்’ மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார் என்பதுதான். அவரது பின்னணி இசை இந்தப் படத்துக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப ரீதியாகவும் ‘பிளாஸ்ட்’ பலத்துடன் வருகிறது. அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். வீரமணி கணேசன் கலை இயக்கம், பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகள், தினேஷ் மனோகரன் ஆடை வடிவமைப்பு ஆகியவை படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றன.

கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பணியாற்றியுள்ளனர்.

படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், ‘பிளாஸ்ட்’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. குடும்ப உணர்வுகளும் அதிரடி அம்சங்களும் கலந்த இந்தப் படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.