Web Ad 2

‘சிறை’ படம் பார்வையாளர்களை ஈர்த்ததா?: திரை விமர்சனம்

Web Ads

பொதுவாக, மனித வாழ்வில் யாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. அவ்வப்போது நேரிடும் மன அழுத்தங்களால் தீதும் நன்றும் நிகழ்ந்து விடுகிறது. எச்சூழலிலும் நிலைமாறாத கருணைமனம் காலத்தால் போற்றப்படுகின்றது. இதனை நுட்பமாய் உணர்ந்து உயர்தலே மனித தர்மம். அனைத்து மறையும் வலியுறுத்தும் வாழ்வியல். இப்ப ‘சிறை’ திரைப்படம் பற்றிய விஷயத்திற்கு வருவோம்..

விக்ரம் பிரபுவின் 25-வது திரைப்படமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக இயக்குநர் வெற்றிமாறனிடம் பணிபுரிந்த சுரேஷ் ராஜகுமாரி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் தமிழ் எழுதிய கதைக்கு இவர் திரையாக்கம் கொடுத்துள்ளார். இப்படம் பார்வையாளர்களை ஈர்த்ததா என காண்போம்.

வேலூர் ஜெயிலிலிருந்து சிவகங்கை கோர்ட்டுக்கு கைதியை அழைத்துச் செல்லும் நீண்ட பயணம்தான் இப்படத்தின் கதைக்கரு. இந்த பயணத்தின்போது நிகழ்கின்ற எதிர்பாராத சம்பவங்கள், கைதி தப்பிப்பது, தப்பிய கைதி என்ன செய்கிறான்? மற்றும் இது தொடர்பான கதாபாத்திரங்களின் கடந்தகால வாழ்க்கை என்னென்ன? என்பதே விறுவிறுக்கும் மீதிக்கதை.

வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல், மாறுபட்ட காட்சிகளால் ஆடியன்ஸை எதிர்பார்க்க வைத்திருக்கிறது. ‘டாணாக்காரன்’ படத்தில் ஸ்லிம்மாக வந்த விக்ரம் பிரபு, இப்படத்தில் 15 கிலோ உடல் எடையை மட்டுமல்ல, நடிப்பிலும் அதிகரித்திருக்கிறார்.

கதிரவன் என்ற இவரது கதாபாத்திர உடல் மொழி, ஆத்திரம், முகபாவனை, மனிதநேயம் என கதாபாத்திரமாகவே உருமாறியிருக்கிறார்.

அப்துல் என்ற கைதியாக வரும் புதுமுகம் அக்சய் குமார் கதைக்குள் கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார். அவரது அப்பாவித்தனம், வேதனை, காதல், பதற்றம் என பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது காதலியாக வரும் புதுமுகம் கலையரசி என்ற அனுஷமாவும் காதல் காட்சிகளில் உயிரோட்டமாய் வாழ்ந்திருக்கிறார்.

மேலும் மூணாறு ரமேஷ், ஆனந்தா, தம்பி ராஜா உள்பட அனைத்து துணை கதாபாத்திரங்களும் நிறைவாக நிற்கின்றன. கமர்சியலில் இருந்து விலகி சமூக அக்கறையுடன் காட்சிகளும் வசனங்களும் பிரதிபலிக்கின்றன.

காவல் துறைக்குள் நிகழும் அதிகார அரசியல், ஏற்றத்தாழ்வுகள், அத்துமீறல்கள், வன்மம் ஆகியனவும்; நீதிமன்ற நடைமுறைகளின் சிக்கல்கள் யாவும் அழுத்தமாக உரைக்கப்பட்டுள்ளன.

ஹீரோயிசம், வில்லத்தனம் காட்டாமல் பதற்றமாய் பயணிக்கும் இப்படத்திற்கு, மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு உணர்வுப் பூர்வமாய் வண்ணம் அடித்திருக்கிறது. அதேபோல், ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் பல காட்சிகளில் வசீகரிக்கிறது.

அருண் கே. மணிகண்டன் செவன்த் ஸ்கிரீன் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் ஆகியோர் நேர்மையை உரக்கச் சொல்லும் இப்படத்தை தயாரித்துள்ளனர். மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

மொத்தத்தில் படம் எப்படி இருக்குன்னா.. இது உணர்ச்சிகரமான திரைச்சித்திரம்; அனைத்து துறை சார்ந்த அதிகார வர்க்கத்திற்கும் சொல்லப்பட்ட பாடம், இந்த படம். மேலும் ஒவ்வொரு பார்வையாளரின் மனத்திரையிலும் பதிக்கப்பட வேண்டிய நல்ல புத்தகம். இதனை மதிப்போம், மாண்புறுவோம்.;

70%

'சிறை' திரை விமர்சனம்

  • Rating