2026-ம் ஆண்டு சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா?
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இடம் பெற்ற God Mode என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படம், ஆன்மீகம் மற்றும் ஆக்ஷன் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யா கருப்பு மற்றும் சரவணன் என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், சூர்யா உடன் இணைந்து த்ரிஷா, நட்டி என்ற நடராஜன், சுவாஷிகா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஆர் ஜே பாலாஜி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது சூர்யாவின் 45ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதேபோன்று சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து மமிதா பைஜூ, ரவீனா தண்டன், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படமும் 2026-ம் ஆண்டு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்து, சூர்யா 47 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஆவேசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் படைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா நசீம் இந்தப் படத்தின் மூலமாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார்.
இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சூர்யா இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த 3 படங்களும் வெளியாகி சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

