சிம்பு வர தாமதம்; விக்ரமுடன் கூட்டணி வைத்த ‘பார்க்கிங்’ பட இயக்குநர்..

சமீபத்திய 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம். அந்தப் படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு படமும் இயக்காமல் இருக்கிறார் ராம்குமார்.
இடையே, சிம்பு நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டாலும், அப்படம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. தற்போது, சிம்பு படத்துக்கு முன்பு வேறொரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதில் நாயகனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரம் – ராம்குமார் கூட்டணி படத்தை அருண் விஸ்வா தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் இறுதிக்கட்ட கதை விவாதம், பேச்சுவார்த்தை அனைத்தும் முடிவடைந்துவிட்டால், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும் என்கிறார்கள்.
அருண் விஸ்வா தயாரிப்பில் விக்ரம் – மடோன் அஸ்வின் கூட்டணி படம் அறிவிக்கப்பட்டது. அதன் கதை இறுதியாகாத காரணத்தினால், மடோன் அஸ்வினுக்கு பதிலாக ராம்குமார் அப்படத்தினை இயக்க ஒப்பந்தமாக உள்ளார்.
முன்னதாக, ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவிருந்த சிம்பு, வடசென்னை கதைக்களத்தில் வெற்றிமாறனுடன் இணைந்து விட்டார். அதனால், ராம்குமார்- சிம்பு கூட்டணி தாமதமாகும் நிலை ஏற்பட்டது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
