மாமன்னன் படக்குழுவை பாராட்டி விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இப்படத்தை பாராட்டி பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது, மாமன்னன் படக்குழுவை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், “மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும். முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!

உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.