இன்று இளையராஜா பிறந்த நாள்; இந்நாளிலும் அவரை சீண்டலாமா?
‘இசைஞானி’ இளையராஜா சுமார் 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1,500-க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்கிற பெருமையையும் இளையராஜா பெற்றுள்ளார்.
இளையராஜா திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும், லண்டனில் அவர் சிம்பொனி இசையமைத்ததை பாராட்டியும் தமிழக அரசு சார்பில் இன்று (ஜூன் 2) பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த பாராட்டு விழா ஆகஸ்ட் 2-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளையராஜா இன்று தனது 82-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் பிரபலங்கள் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அவரது இல்லத்திற்குச் சென்றும் அவரிடம் ஆசீர்வாதமும் வாங்கி இருக்கின்றனர்.
இச்சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, ‘என்னை வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. எனக்கு வாழ்த்து கூறுவதற்காக சிரமம் பார்க்காமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். தூர தேசத்திலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி.
இவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு வாயடைத்து போகிறது. வார்த்தையே வருவதில்லை. என்னை பார்ப்பது சாதாரண விஷயம். ஆனால், அதற்காக தூங்காமல் வருகிறார்கள். ஒரு வாரம் கூட தூங்காமல் இருக்கிறார்கள்.
அதைக் கேட்கும் பொழுது, கடவுள் என் மேல் எவ்வளவு கருணை வைத்துள்ளார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை’ என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்க உள்ள ஆகஸ்ட் 2-ந்தேதிக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் உங்களது இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்’ என தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், ‘தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கும் முயற்சியை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்டபோது, இளையராஜா சட்டென கோபமடைந்தார்.
‘இதை எப்படி பார்க்கணும்? இப்படி எல்லாம் கேட்கக்கூடாது. இதனால்தான் எனக்கு கோபம் வருகிறது. இதை அப்படியே வெளியே இளையராஜா கோபப்படுகிறார் என்று மாறிவிடுகிறது. ஒரு சந்தோஷமான செய்தி கூறியிருக்கிறேன். நான் அறிவிக்க வேண்டியதை அறிவித்து விட்டேன். நீங்கள் அதில் ஒரு கேள்வி கேட்காதீர்கள். அதோடு முடித்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
