கடுமையான இயக்குனரா பாலா?: ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கருத்து

சிறந்த இயக்குனர் தான் பாலா. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக கடுமையாக நடந்துகொள்வாரா? என்பது பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கருத்து காண்போம்..

தமிழ்த்திரை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பாலா. சேது படத்தில் இயக்குனராக அறிமுகமாகி நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என தனித்த முத்திரை பதித்தவர்.

இவற்றில் பிதாமகன் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக பாலா தேசிய விருது பெற்றார்.

பரதேசி திரைப்படமும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அடுத்ததாக விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து ‘வர்மா’ என்ற படத்தை விக்ரம் கேட்டுக்கொண்டதால் ரீமேக் செய்தார். பின்னர், படத்தை பார்த்த விக்ரம் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டதால், அவர்களது நெருங்கிய நட்பு தளர்ந்தது.

இதனையடுத்து சூர்யா நடிப்பதாக ஆரம்பித்து, பின்னர் அருண் விஜய்யை வைத்து ‘வணங்கான்’ படத்தை எடுத்தார் பாலா. படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக அருண் விஜய்யின் நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், பாலா குறித்து ‘வணங்கான்’ படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தெரிவிக்கையில், ‘பாலாவை பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால், அவர் எவ்வளவு நல்லவர் என்பது எனக்கு தெரியும். அவருடன் ஒரு படத்தில் வேலை செய்யும்போதுதான் உண்மையாக ஒரு வேலையை செய்வது என்னவென்று கற்றுக்கொண்டேன்.

அவரை பலரும் கடுமையான இயக்குனர் என்று சொல்வார்கள். ஆனால், பாலாவோ தன்னுடன் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களை பத்திரமாய் பார்த்துக்கொள்வார் என்பது அவருடன் பயணித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்’ என்றார்.

stunt master silva emotional talks about director bala