கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் ‘சேயோன்’ மூவி..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘சேயோன்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமான கிராமத்து இளைஞன் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் காணப்படுகிறார். அவரைச் சுற்றி மயில்தோகை விரிந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘சேயோன்’ என்பது தமிழ்க் கடவுள் முருகனைக் குறிக்கும் பெயராக இருப்பதால், இப்படம் முருகனை மையப்படுத்திய கிராமத்துக் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
‘மீண்டும் ஒரு முறை இணைகிறோம், மாபெரும் கொண்டாட்டத்திற்காக” என்று சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விவேக் விஜயகுமார் கவனிக்க, சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், இக்கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் என்ற பெயரும் முருகர் பெயர்தான் என்பது கவனிக்கத்தக்கது.
