ஒரு மாசமா போராடி மீண்டு வந்திட்டேன்: பாடகி ஸ்ரேயா கோஷல் குஷி

குயிலை கூண்டுக்குள் அடைத்ததுபோல, பாடகி ஸ்ரேயாவுக்கு நேர்ந்தது, தற்போது சரியாகி விட்டது. இது குறித்த தொழில்நுட்ப தகவல் பார்ப்போம்..

இந்திய சினிமாவில், இனிய குரல் வளத்தால் சிறந்த பின்னணி பாடகியாக ஜொலித்து வருகிறார் ஸ்ரேயா கோஷல். தேவதை ரகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார்.

இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் ஹிந்தியை தவிர வேறு எந்த மொழியும் அவ்வளவாக தெரியாது. எனினும், தனக்குரிய மொழியில் மாற்றியும் புரிந்து உணர்ந்து பாடுவதில் வசீகரிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்பே வா, நினைத்து நினைத்து பார்த்தேன், உருகுதே மருகுதே, எனக்குப் பிடித்த பாடல், ஒன்ன விட… என பல பாடல்களை பாடியுள்ளார். இதுவரை 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவ்வப்போது நிகழ்த்தும் இவரது போட்டோ ஷுட் ஹூரோயின்களுக்கே டஃப் கொடுத்து வைரலாகி வருவதும் வாடிக்கை.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு ஹேக்கர்களிடம் இருந்து தனது எக்ஸ் பக்கத்தை மீட்டுள்ளதாக ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது கணக்கை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்தை ஏஐ மூலம் மாற்றி, பொய்யான தகவல்களுடன் செய்திகள் பரவுவதாகவும், அதனை கிளிக் செய்தால் போலி இணையதளத்திற்கு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, அதனை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ‘ஐ எம் பேக். இனி தொடர்ந்து என்னுடைய பக்கத்தில் எழுதவும் பேசவும் செய்வேன். ஆம், கடந்த பிப்ரவரி மாதம் ஹேக் செய்யப்பட்டது. எக்ஸ் குழுவுடன் தொடர்பு கொள்வதில் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர்களிடம் இருந்து உதவி கிட்டியது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது’ என மகிழ்ந்துள்ளார் ஸ்ரேயா.

இதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா போல, கதாநாயகியாக ஆர்வம் இல்லையா? எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

singer shreya ghoshal rescued her x page