
பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சுக்கு, பார்த்திபன், உதயநிதி கருத்து
சினிமாவில் அரசியலும், அரசியலில் சினிமாவும் தவிர்க்க முடியாத நிலை என்பது தெரிந்ததே. அவ்வகையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இன்று தெரிவித்த கருத்தை காண்போம்..
பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல், அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது. இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருகிறார்.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபனிடம், இது குறித்த கேள்விக்கு,
‘பெரியாரை கொஞ்சம் சிறியோர் ஆக்குவதற்கு சீமானுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கலாம். இந்த விவகாரத்தை பற்றி நாம் பேசாமல் விட்டுவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
பெரியார் எவ்வளவு பெரிய பெரியாராக இருந்தால், இன்றைய அரசியலுக்கும் அவர் தான் தேவைப்படுகிறார். சீமான் இன்று அரசியல் செய்வதற்கே தந்தை பெரியார்தான் தேவைப்படுகிறார்’ என தெரிவித்துள்ளார்.
அண்மையில், அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘இனிமேல் பெரியார் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரை தூற்றுவோரை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். அதற்கு இனிமேல் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.