பிரதமர் மோடியுடன் பாலிவுட் பிரபலங்கள் சந்திப்பு; காரணம்?
பிரதமர் நரேந்திர மோடியை, பாலிவுட் பிரபலங்கள் சந்தித்துள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:
டிசம்பர் 14-ம் தேதி அன்று நடைபெறும் ஆர்.கே. திரைப்பட விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக, கபூர் குடும்பத்தினர் டெல்லியில் பிரதமரை சந்தித்தனர். இந்நிகழ்வு, மறைந்த நடிகர்-இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான ராஜ்கபூரின் 100-வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்பட உள்ளது.
ஆலியா பட், ரன்பீர் கபூர், கரீனா கபூர், சைஃப் அலி கான், கரிஷ்மா கபூர், ரித்திமா கபூர் சாஹ்னி, ஆதர் ஜெயின், அர்மான் ஜெயின் மற்றும் நீத்து சிங் ஆகியோர் பிரதமருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். மேலும் கரீனா கபூர், தனது மகன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் கையொப்பம் வாங்கினார்.
பாலிவுட்டின் மிகவும் பிரபலமான குடும்பங்களில் ஒன்றாக கபூர் பேமிலி உள்ளது. அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பிரதமர் மோடி, அவர்கள் விருப்பத்திற்கேற்ப புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.
‘எங்கள் தாத்தா, புகழ்பெற்ற ராஜ்கபூரின் அசாதாரண வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூர மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’ என கரீனா தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், ஒரு செல்ஃபியைப் பகிர்ந்து நீத்து கபூரும் தன் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
டிசம்பர் 13 முதல் 15 வரை, இந்த விழா 34 இடங்களில் 101 திரையரங்குகளில் நடைபெறும். இது இன்றுவரை ராஜ்கபூரின் திரைப்படவியலின் மிக விரிவான பின்னோக்கிப் பார்வைகளில் ஒன்றாகும். அவரது கிளாசிக் படங்கள் பெரிய திரையில் காண்பிக்கப்படும்.
இதனால், நீண்டகால ரசிகர்கள் மற்றும் புதிய பார்வையாளர்கள் இருவரும், அவரது கற்பனைத் திரைப்படத் தயாரிப்பின் மகத்துவத்தைப் பார்க்க முடியும்.
அவரா, ஸ்ரீ 420, சங்கம் மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்ட கபூரின் மிகவும் பிரபலமான படங்களின் தொகுப்பை இந்த விழாவில் காட்சிப்படுத்த உள்ளனர்.
அரிய கலைகளுக்கு அவனியில் அழிவில்லை; அவை என்றும் நிலைத்து வாழும்.!