Pushpa 2

ரசிகர்களுக்கு, ‘தல’ அஜித் விடுத்த முக்கிய கோரிக்கை..

‘தல’ அஜித், தன்னுடைய ரசிகர்களுக்கு, முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்..

நடிகர் அஜித் இணையவெளி எதிலும் இல்லை. ஆனாலும், அவர் குறித்து தினமும் இணையத்தில் பேசப்பட்டும், பொது இடங்களிலும் அவரது பெயர் உச்சரிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

அவ்வகையில், பொது இடங்களில் ‘கடவுளே அஜித்’ என ரசிகர்கள் கோஷமிடுவது சமீப காலமாகவே டிரெண்டாகி விட்டது.

பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த கோஷம் எழுப்பப்படுவதுடன், அரசியல் கட்சி கூட்டங்களிலும் இந்த வாசகம் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வருகிறது. இதனால், இது எல்லை மீறிப் போவதாக சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், இந்த கோஷம் தொடர்பாக அஜித் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,

“சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில்‌, பொதுவெளியில்‌ அநாகரீமாக, தேவையில்லாமல்‌ எழுப்பப்படும்‌ “க…. அஜித்தே” என்ற இந்த கோஷம்‌ என்னை கவலையடையச்‌ செய்திருக்கிறது.

எனது பெயரைத்‌ தவிர்த்து, என்‌ பெயருடன்‌ வேறு எந்த முன்னொட்டும்‌ சேர்த்து அழைக்கப்படுவதில்‌ நான்‌ துளியும்‌ உடன்படவில்லை. எனது பெயரில்‌ மட்டுமே நான்‌ அழைக்கப்பட வேண்டும்‌ என விரும்புகிறேன்‌.

எனவே, பொது இடங்களிலும்‌ மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களிலும்‌ அசெளகரியத்தை ஏற்படுத்தும்‌ இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள்‌ ஒத்துழைப்பை நான்‌ அன்புடன்‌ வேண்டுகிறேன்‌. என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள்‌ என்று நம்புகிறேன்‌.

யாரையும்‌ புண்படுத்தாமல்‌ கடினமாக உழைத்து, உங்கள்‌ குடும்பத்தை கவனித்துக்‌ கொள்ளுங்கள்‌ மற்றும்‌ சட்டத்தை மதிக்கும்‌ குடிமக்களாக இருங்கள்‌.

உங்களுக்கும்‌ உங்கள்‌ குடும்பத்தினருக்கும்‌ அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்‌. வாழு & வாழவிடு” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அஜித்.

இதனையடுத்து, இந்த அறிக்கைக்காக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் அறிக்கையால் பொது இடங்களில் சமீப காலமாக ஒலித்து வந்த “க…. அஜித்தே’ என்ற கோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் யாரையும்‌ புண்படுத்தாமல்‌, உங்கள்‌ குடும்பத்தை கவனித்துக்‌ கொள்ளுங்கள்‌. வாழு, வாழ விடு என தனது ஸ்டைலில் ஏகே அறிக்கை வெளியிட்டுள்ளதும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனால் ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். இதில் ‘விடாமுயற்சி’ அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்றமென்ன, ‘தல’ பொங்கல்.. விடாத கொண்டாட்டம் தான்.!

ajith request to fans for please do not call me as kadavule ajithe
ajith request to fans for please do not call me as kadavule ajithe