இந்தியாவிற்கே பெருமை சாமி: இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..
இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்திற்கு, ரஜினிகாந்த் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
இளையராஜா ‘வேலியன்ட்’ என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெறவிருக்கும் இளையராஜாதான்; இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி ஒன்றை அரங்கேற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சிம்பொனி இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தப் பதிவு, இன்று மார்ச் 8 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி அரங்கேறவிருப்பதால், இளையராஜாவுக்கு பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தினையும் கூறிவருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இளையராஜாவை வாழ்த்தினார்கள். அதற்கு ராஜாவும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள் இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை. பாராட்டுகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, இளையராஜாவை ரஜினிகாந்த் எப்போதும் சாமி என்றுதான் அழைப்பார் என்பது நினைவுகூரத்தக்கது.
