ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?: வைரலாகும் தகவல்

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்? என்பது பற்றிய தகவல்கள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது ரஜினி கேரளாவில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு பணிகளில் இயக்குனர் நெல்சன் ஈடுபட்டுள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘கூலி’ வெளியாகவுள்ளது. ‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு ரஜினியின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதனிடையே, தற்போது புதிய தகவல் வைரலாகி வருகிறது.

தெலுங்குப் பட இயக்குனர் விவேக் ஆத்ரேயா கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதால், அவரை தனது அடுத்த படத்தின் இயக்குனராக முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகிறது.

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சரிப்போதா சனிவாரம்’ படத்தை இயக்கியவர் விவேக் ஆத்ரேயா. அந்தப் படத்தில் இடம்பெற்ற மாஸ் காட்சிகள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ரஜினி-விவேக் ஆத்ரேயா இணையும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் கூறுகிறார்கள். விரைவில், இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மணிரத்னம், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகிய இயக்குனர்கள் பெயரும் சொல்லப்பட்டது. இதில், ‘ஜனநாயகன்’ படத்தின் இயக்குனர் எச்.வினோத் கமிட் ஆகலாம் எனவும் கணிக்கப்பட்டது. இச்சூழலில், விவேக் ஆத்ரேயா பெயர் சொல்லப்படுகிறது.

எதை எங்க எப்படி அறிவிக்கனும்னு சூப்பர் ஸ்டாருக்கு தெரியாதா என்ன..பொறுத்திருந்து பார்ப்போம்.!