ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது, மணிரத்னமா? மாரிசெல்வராஜா?
ரஜினியின் அடுத்த தேர்வு மணிரத்னமா? மாரிசெல்வராஜா? என ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஸாஹிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அநேகமாக அடுத்தாண்டு ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி மீண்டும் நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரஜினியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இது ரஜினியின் 172 ஆவது படமாக உருவாகவுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் படத்தை பற்றி தற்போதே பேசி வருகின்றனர். தொடர்ந்து ரஜினி படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
அவ்வகையில், ரஜினி அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. விஜய்யின் GOAT படத்தை இயக்கிய வெங்கட் பிரபு ரஜினியிடம் ஒரு கதை சொன்னதாகவும், ரஜினிக்கு அக்கதை பிடித்துவிட்டதாகவும் பேசப்படுகின்றது. அதைப்போல ரஜினி மணிரத்னம் மற்றும் மாரி செல்வராஜிடமும் கதை கேட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதில், யாரை தன் அடுத்த பட இயக்குனராக தேர்வு செய்வது என ரஜினி குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை இணையத்தில் கூறி வருகின்றனர். அதன்படி ரஜினி மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் பலரது கருத்தாக உள்ளது.
தளபதி படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது.
இதைப்போல கமல், நாயகன் படத்திற்கு பிறகு 36 வருடங்கள் கழித்து மீண்டும் தக்லைப் படத்தின் மூலம் மணிரத்னத்துடன் இணைந்திருக்கிறார். அப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ கமலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதேபோல், டிசம்பர் 12-ந்தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் வருவதால், அன்று ரசிகர்களுக்கான முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
