ராஜமவுலி-மகேஷ்பாபு இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எப்போது தெரியுமா?

ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருவது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை எக்ஸ் தள உரையாடல் மூலம் தொடங்கியிருக்கிறது படக்குழு.
இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாராகி வரும் பெரும் பொருட்செலவைக் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெயர், மகேஷ் பாபு உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எதையுமே படக்குழு வெளியிடவில்லை. நவம்பரில் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இதனிடையே மகேஷ் பாபு, ராஜமவுலி, பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரித்விராஜ் உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் நகைச்சுவையாக உரையாடி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக இருப்பதால், ஃபர்ஸ்ட் லுக்கும் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதற்கு தகுந்தாற் போன்று படக்குழு பணிபுரிந்து வருகிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நவம்பர் 16-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
