இப்படத்தை நீங்கள் பார்த்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன் தனுஷ் சார்: வைரலாகும் பிரதீப் பதிவு..
பயிற்சியும் முயற்சியும் இருந்தால், இமயமும் இடுப்பளவுதான். இப்ப விஷயத்திற்கு வருவோம்..
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூலில் 50 கோடியை கடந்து கொண்டிருக்கிறது.
கோலிவுட்டில், சென்சேஷனல் ஹீரோவாக உருவெடுத்துள்ள பிரதீப்புக்கு அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வருகின்றன.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
பிரதீப்பின் சம்பளம் 15 முதல் 18 கோடி வரை இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ‘டிராகன்’ படத்திற்கு பிறகு அவரது சம்பளம் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சூழலில், பிரதீப் ரங்கநாதனின் பழைய பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
அதாவது, 2017-ம் ஆண்டு அவர் எடுத்த குறும்படம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதனை தனுஷ் பார்க்கும்படி கேட்டிருக்கிறார். அவர் எடுத்த ‘அப்பா லாக்’ என்ற குறும்படம் movie buff குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது.
‘இப்படத்தை நீங்கள் பார்த்தால், நான் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன் தனுஷ் சார்’ என பிரதீப் ரங்கநாதன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். இந்த ட்வீட் 2017-ம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை தான் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ என்ற திரைப்படமாக எடுத்திருக்கிறார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானோர், ‘அன்று தன் குறும்படத்தை தனுஷை பார்க்கும்படி கேட்ட பிரதீப், இன்று அவர் இயக்கிய படத்துடனே தான் ஹீரோவாக நடித்த படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளார்’ என பேசி வருகின்றனர். ஆம், காலம் மாறும்போது காட்சியும் மாறும்தானே.!
