PettaRap Movie Review
PettaRap Movie Review

இரண்டு பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’. வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க டான்ஸ் கலவையில் களை கட்டுகிறது.

ஆக்சன், இசை என படம் தெறிக்கிறது. சன்னி லியோனும் கிளுகிளுப்பூட்டி கிறங்கடிக்கிறார். இப்படம் எந்த வகையில் ஆடியன்சை கவர்ந்திருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

பாலா என்ற சிறுவனாக வரும் சின்ன பிரபுதேவாவுக்கு, பிரபல ஆக்டர்-டான்சர் (இன்னொரு) பிரபுதேவா போல பிரபலமாய் வந்து கலக்க வேண்டும் என்பது அவரது கனவாக வளர்கிறது.

இந்நிலையில், சின்ன பிரபுதேவா பாலா 11ஆம் வகுப்பு படிக்கும் போது, ஜானகி என்ற பெண் அவனை காதலிக்கிறாள். அவனோ வேறொரு பெண்ணை காதலிக்கிறான். அத்துடன் டீன் ஏஜ் காதல் முறிந்து விடுகிறது; முடிவடைந்தும் விடுகிறது.

இதென்ன முக்கோண காதல் கதையாக இருக்குமோ? என்று பார்த்தால், கதைக்களம் வேறொரு கோணத்தில் விறுவிறுவென பயணிக்கிறது.

பாலா சினிமா வாய்ப்பு தேடி அலைகிறார். இந்நிலையில், பாடகியான வேதிகாவுக்கும் மிரட்டும் ‘தாதா’ மைக்கேலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல், திடீரென பாலாவையும் துரத்தி வர.. படம் ஆக்சன் அவதாரம் எடுத்து பரபரக்கிறது.

படத்தில், சீரியஸ் ஆகவும் அதே நேரம் கிளாமராகவும் மினுமினுக்க விட்டிருக்கும் வேதிகா- பாலா இருவருக்கும் என்னதான் சம்பந்தம்.? இதனை, சஸ்பென்ஸ் கலந்து எதிர்பார்க்க வைத்திருக்கிறது திரைக்கதை.

பாலசுப்ரமணியனாக வரும் பிரபுதேவாவும், ‘ஆக்டர்’ பிரபுதேவா இருவரும் உருவத்தில் ஒன்றுபோல் இருக்கிறார்கள். ஆனாலும், மற்ற கதாபாத்திரங்கள் அதை உணர்வதில்லை.

இருப்பினும், பாட்டு, ஃபைட்டு, மிமிக்கிரி என அள்ளிவிட்டு தாராளமாய் அசத்துகிறார்கள் இரண்டு பிரபுதேவாக்களும். மேலும், ஆங்காங்கே சண்டைகள் என சரமாரியாய் புகுந்து அதிரடியாய் ஆடி இருக்கிறார்கள்.

மொத்தத்தில், லாஜிக் என்பதை பாராமல், ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஃபேன்டஸி மேஜிக் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே. சினு.

ஜிது தாமோதரன் ஒளிப்பதிவில் காட்சிகள் ஜொலிக்கின்றன. டி.இமான் மிக துள்ளலான இசையை வழங்கி இருக்கிறார். இது, இளசுகளை ஆட்டம் போட வைக்கும்.

சிறுசிறு ரோல்களில், ரியாஸ்கான், வையாபுரி என பல துணை நடிகர்கள் வந்து போகிறார்கள்.

குறிப்பாக, உறுத்தாத காமெடி, ஜாலியான டான்ஸ் மற்றும் தெறிக்கும் சண்டைகள் என மிக்ஸ் செய்து, டிஜிட்டல் கால உள்ளங்களுக்கு விருந்து படைக்கப்பட்டிருக்கிறது. இது, செம என்டர்டெயின் மூவியாக வொர்க் ஆகியிருக்கிறது. ரசிகர்களுக்கும் ருசிக்கிறது.

ஆம்.. பேட்ட ராப்பை கவலை மறந்து குஷியாய் ரசிக்கலாம்.!

YouTube video