துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தற்போது வழி அமைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி திரு. செந்தில்குமார் ராமமூர்த்தி வழங்கிய உத்தரவின் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
படத்தில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய முதலீடு, மேலும் இதில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேவையான நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக, ஒரு வாரத்திற்கும் மேலாக நேரம் ஒதுக்கி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நேரில் அழைத்து பேசி, ஒருமித்த முடிவை உருவாக்கிய பிறகே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நீதிபதி அவர்களுக்கு படக்குழு நன்றியை தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், சீயான் விக்ரம் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சுமார் ரூ.80 கோடி செலவில் தயாரான இந்த படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

