தனுஷுக்கு என்னதான் பிரச்சினை, என்னிடம் நேரடியாக சொல்லலாம்: நயன்தாரா வெளிப்படையான பேச்சு
என்னதான் பிரச்சினை தனுஷுக்கு? என வெளிப்படையாக கேட்டுள்ளார் நயன். இது பற்றிய பஞ்சாயத்து சீன்ஸை பார்ப்போம்.
தனுஷ் தயாரித்த ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து சில பாடல் வரிகளை பயன்படுத்த அனுமதி கோரி, அதற்கு தடையில்லா சான்று பெற காத்திருந்தனர்.
ஆனால், தனுஷ் தரப்பில் அனுமதி வழங்கப்படாததால், வேறு வழியின்றி அந்த பாடல் வரிகள் இல்லாமலேயே அந்த ஆவணப்படத்தை வெளியிட முடிவெடுத்து, அதன் டிரைலரை கடந்த மாதம் வெளியிட்டனர்.
அதில், நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்றை பயன்படுத்தி இருந்தனர்.
அந்த 3 விநாடி வீடியோ காட்சியை நீக்காவிட்டால் 10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தனுஷ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் கடுப்பான நயன்தாரா, தனுஷை சரமாரியாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஆவணப்பட ரிலீஸ் சமயத்தில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டதால், பப்ளிசிட்டிக்காக இதை செய்வதாக விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில், இது பற்றி நயன் வெளிப்படையாக பேசியதாவது:
தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட நான் ஏன் பயப்படனும்? ஏதாவது தப்பு செய்திருந்தால் தான் நான் பயப்பட வேண்டும். பப்ளிசிட்டிக்காக ஒருவரின் இமேஜை டேமேஜ் செய்யும் ஆள் நானில்லை.
நாங்கள் பப்ளிசிட்டிக்காக, இதை செய்ததாக சொல்கிறார்கள். சொல்லப்போனால் இது படம் கிடையாது. இது ஒரு டாக்குமெண்ட்ரி. பிடித்திருந்தால் பார்க்கப் போகிறீர்கள். இது ஹிட் அல்லது பிளாப் என்கிற வரையறைக்குள் வராது.
நான் வெளிப்படையாக பேசியதால்தான் அது சர்ச்சையாக மாறியது. நான் உண்மையாகவே அவரை தொடர்புகொள்ள முயன்றேன். அப்பொழுது தான் அதற்கான பதில் கிடைக்கும் என எண்ணினேன். அவரை தொடர்புகொள்ள பல வழிகளில் முயன்றோம். ஆனால், அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. அதனால், காட்சிகளை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்தோம். அவரது படம், அவர் தரவில்லையென்றால் விட்டு விடுவோம் என முடிவெடுத்தோம்.
ஆனால், அப்படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்களில் 4 வரிகளை பயன்படுத்த ஆசைப்பட்டோம். அந்த 4 வரிகளும் எங்களுக்கு பர்சனலாக மிகவும் நெருக்கமானது. அதனால், அதை பயன்படுத்த விரும்பினோம்.
அந்த நான்கு வரிகளும் எங்கள் வாழ்க்கையும், எங்கள் காதலையும், எங்கள் குழந்தைகளையும் பற்றிய வரிகளாகும். அதனால் தான் நாங்கள் அதற்கான உரிமையை பெற போராடினோம்.
தனுஷ் எனக்கு நல்ல நண்பர் என்பதால், அவர் தான் முதலில் எங்களுக்கு அனுமதி தருவார் என எதிர்பார்த்தோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் எங்கு எதனால் எல்லாம் மாறியது என தெரியவில்லை. அதெல்லாம் போகட்டும், நான் உண்மையிலேயே தனுஷிடம் பேசி, என்ன பிரச்சினை என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால், அது கடைசி வரை முடியவில்லை.
பின்னர், எங்கள் மொபைலில் எடுத்த காட்சிக்கு உரிமை கோரியது எனக்கு சரியாகப் படவில்லை. அதனால்தான், அந்த அறிக்கையை வெளியிட்டேன்’ என மனம் திறந்து நயன்தாரா கூறியுள்ளார். இதற்கு தனுஷும் உரிய பதிலை தருவாரா? என இணையவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.