பொய்யான செய்திகள் வந்தால், இனிமேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: சாய் பல்லவி ஆவேசம்
‘இனிமேல், வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என நடிகை சாய் பல்லவி ஆத்திரமடைந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:
மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி, அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் செம பிஸி.
குறிப்பாக இவர் நடித்த ‘மாரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்கிற சாதனையையும் படைத்தது. மேலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து கடந்த மாதம் வெளியான ‘அமரன்’ படம், சாய் பல்லவியை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
தற்போது சாய் பல்லவி, பாலிவுட்டிலும் ரன்பீர் கபூர் நடிக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில்…
ரன்பீர் கபூர் ராமர் வேடத்தில் நடிக்க, சாய் பல்லவி சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி முழுக்க முழுக்க சைவமாக மாறிவிட்டார் என ஒரு செய்தி வெளியானது.
அதாவது, ‘ராமாயணம்’ படத்தில் நடித்து வருவதால், அசைவம் சாப்பிடாமல் இருக்கும் சாய் பல்லவி, ஷூட்டிங் செல்லும்போது, தன்னுடன் ஒரு சமையல்காரரையும் அழைத்து செல்கிறார். அவர் செய்து கொடுக்கும் உணவுகளையே சாப்பிடுவதாக கூறப்பட்டிருந்தது. இது தான், சாய் பல்லவியை கடுப்பேற்றி கோபத்தில் ஆழ்த்தியதாக தெரிகிறது.
இதற்கு, ‘என்னைப் பற்றி வெளியாகும் பொய்யான தகவல்களுக்கு, நான் பலமுறை அமைதியாகவே இருந்துள்ளேன். இது போன்ற செய்திகள் என்ன உள்நோக்கத்தில் வெளியிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்கு தான் தெரியும்.
இது போன்ற வதந்திகள் வெளியாவது தொடர்கதையாக உள்ளது. ஆனால், இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் பதில் அளிக்கும் நேரம் இது!
என் படங்களில் ரிலீஸ் அறிவிப்புகள் வரும்போதும், என் கேரியரில் முக்கிய நேரங்களிலும் இது போன்ற வதந்திகள் அதிகம் பரவுகிறது. இது போன்ற பொய்யான செய்திகள் இனிமேல் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என ஆவேசப்பட்டுள்ளார்.
என்ன கொடுமை சார் இது.! சும்மாவே, சாய் பல்லவிக்கு ரெண்டு கன்னமும் சிவக்கும். இதுல, கண்களும் சிவந்தா ரசிகர்கள் மனசும் தாங்காதுங்க; ஸோ.. பளீஸ் ஸ்டாப் வதந்தீஸ்.!