சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘நாகபந்தம்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு!

புராணம், மர்மம், சாகசம் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளின் சங்கமமாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படமான ‘நாகபந்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரலாறு மற்றும் ஆன்மிகப் பின்னணியுடன் கூடிய மிகப்பெரிய திரையரங்கு அனுபவமாக உருவாகியுள்ளது.
வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள், ஊடக நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் உருவாக்கப் பயணம், தொழில்நுட்ப பிரம்மாண்டம், புராண உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, படத்தின் காட்சிப் பிரம்மாண்டம் மற்றும் தயாரிப்பு தரம் குறித்து பாராட்டி, “நாகத்தை மையமாகக் கொண்ட கதைகளுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், “இது திரையரங்குகளில் மட்டுமே முழுமையாக அனுபவிக்கக்கூடிய திரைப்படம். தலைப்பிலிருந்தே ஒரு மர்மம் இருக்கிறது. டிரெய்லரை பார்க்கும்போதே இது ஒரு பிரம்மாண்டமான சாகசப் பயணம் என்பதை உணர முடிகிறது” என்று கூறினார்.
நடிகர் அஜய் ரத்னம், இயக்குநர் அபிஷேக் நாமாவின் பல ஆண்டுகால அனுபவமும் சினிமா பற்றிய புரிதலும் இந்தப் படத்தில் வெளிப்பட்டுள்ளதாக பாராட்டினார். அதேபோல், நடிகர் ஜான் கொக்கேன், “நாகபந்தம் ஒரு உலகத் தரத்திலான மிதாலஜிக்கல் அட்வென்ச்சர் திரைப்படம். இதை பெரிய திரையில் மட்டுமே முழுமையாக ரசிக்க முடியும்” என்றார்.
நடிகை நபா நடேஷ், “வரலாறு, மர்மம், ஆக்சன், சாகசம் மற்றும் உணர்வுகள் அனைத்தும் கலந்த திரைப்படம் இது. டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.
கதாநாயகன் விராட் கர்ணா, “இந்தப் படம் இந்திய பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் நமது தொன்மையான மரபுகளை பேசுகிறது. ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம்” என்று கூறினார்.
கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் விராட் கர்ணாவுடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அபிஷேக் நாமா இயக்கியுள்ள இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். அபே இசையமைத்துள்ள நிலையில், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநர் அசோக் குமார் பிரம்மாண்டமான செட்களை வடிவமைத்துள்ளதுடன், தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் இயக்குநர் கெச்சா காம்பக்டீ ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘நாகபந்தம்’, வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் இந்த திரைப்படம் மீது ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
