தளபதி விஜய்க்கு, சீமான் பாராட்டு: அரசியல் வட்டாரத்தில் வியப்பு; பரபரப்பு..
தளபதி விஜய்யை சீமான் பாராட்டியுள்ள நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் காண்போம்..
தளபதி விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ முதல் மாநாடு விக்கிரவாண்டியில் சிறப்பாக நடந்து முடிந்தது. அது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இச்சூழலில், விஜய்யை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருந்த சீமான், முதன் முறையாக அவரை பாராட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அனைவரின் கவனத்தையும் திசைதிருப்ப வைத்துள்ளது.
வட மாவட்டங்களில் கோர தாண்டவமாடிய பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களை கடுமையாக புரட்டிப் போட்டுள்ளது. புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளும் கட்சியான தி.மு.க உள்பட அனைத்து கட்சிகளும் உதவி செய்து வரும் நிலையில், விஜய்யும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்னையில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வரவழைத்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த உதவியே அவருக்கு வினையாகிப் போனது. அதாவது, பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருக்கையில், அவர்களின் இடத்துக்கு சென்று நிவாரண உதவி வழங்காமல், ஆறுதல் தெரிவிக்காமல் அவர்களை தனது இடத்தில் வரவழைத்து உதவி செய்தது மற்ற அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, நடுநிலையாளர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
துயர் நேரத்தில் மக்களுடன் களத்தில் நிற்காமல் விஜய் எப்படி அரசியல் செய்வார்? என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கணைகள் வந்து கொண்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களிடம் சகஜமாக பேசவே, அவர்களை சென்னைக்கு வரவழைத்ததாக இதற்கு விஜய் விளக்கம் கொடுத்த நிலையில், இந்த விஷயத்தில் சீமான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
விஜய் புயல் பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரடியாக செல்லாதது குறித்து, சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ”விஜய் நேரடியாக களத்துக்கு சென்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்து விடும். ஆகையால், விஜய் நேரடியாக களத்துக்கு செல்வதில் பிரச்சினை இருக்கிறது.
ஆனாலும், நேரில் அழைத்தாவது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற விஜய்யின் எண்ணத்தை பாராட்டியாக வேண்டும்” என கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இருந்து நீண்ட நேரம் போகாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த பெஞ்சல் புயலை போல், விஜய்க்கு எதிராக மையம் கொண்டிருந்த சீமான், திடீரென விஜய்யை பாராட்டித் தள்ளியிருப்பது நாம் தமிழர் கட்சியினருக்கே இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
விஜய்க்கு எதிரான மனநிலையில் இருந்து சீமான் கரை கடக்க தொடங்கி விட்டாரா? மீண்டும் அண்ணன் தம்பி பாசம் மலருகிறதா? என அரசியல் விமர்சகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில், ரஜினியை சீமான் சந்தித்து உரையாடியது குறித்து கேட்டபோது, ‘நாங்கள் பேசியதை வெளியில் சொல்ல முடியாது’ என கூறினார். இந்நிலையில், விஜய்யின் முழு நேர அரசியல் பயணத்தில், சீமான் போடும் அரசியல் வியூகம் என்னவாக இருக்கும்? எனவும் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.