Pushpa 2

கங்குவா படத்திற்கு பிறந்தது கற்காலமா? பொற்காலமா? திரை விமர்சனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து ‘பான் இந்தியா’ படமாக மிகப் பிரமாண்டமாய் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது ‘கங்குவா’.

மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த கங்குவா, முன்னதாக சூர்யா சொன்னது போல ‘நெருப்பாக இருந்ததா? ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? படத்தின் வரலாற்றுக் கதை தான் என்ன? என்பது குறித்து பார்ப்போம்..

ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சி மையம் ஒன்றில், சிறுவர்களை வைத்து மூளை மாற்று சிகிச்சை, அதிக ஞாபக சக்தி என ஆராய்ச்சி நடைபெறுகிறது. அங்கிருந்து ஜீட்டா என்ற சிறுவன் தப்பித்து கோவா வந்து விடுகிறான். கோவாவில், போலீசாருக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்துக் கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார் பிரான்சிஸ் என்கிற சூர்யா.

இந்நிலையில், ரஷ்ய கும்பலானது அதீத மூளைத்திறன் கொண்ட (அல்லது ஏழாவது அறிவு கொண்ட..?) ஜீட்டா சிறுவனை துரத்தி வருகிறது. பிரான்சிஸ் சூர்யா சிறுவனை காப்பாற்ற போராடுகிறார். சிறுவனுக்கும் பிரான்சிஸ் சூர்யாவுக்கும் இடையேயான தொடர்பை 1070 என்ற காலக்கட்டத்தில் காட்டுகிறார்கள். முதல் பாதி முடிந்து இடைவேளை விடப்படுகிறது. படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ பாரம் சுமந்து இறக்கியதைப் போல பெருமூச்சும் ஏற்படுகிறது. பின்னர், ஜீட்டா சிறுவனை ரஷ்ய கும்பல் தூக்கிச் செல்ல… அங்கிருந்து கதை கற்காலம் நோக்கிப் பயணிக்கிறது.

அதாவது, ரோமானிய அரசன் ஒருவன் ஐந்து நிலங்களைக் கொண்ட ஓர் ஊரை கைப்பற்ற முடிவு செய்கிறான். ‘ஐந்தீவில் பெருமாச்சி’ என்கிற கங்குவா சூர்யா இதனை கடுமையாக எதிர்க்க, பெரிய போர் மூள்கிறது. இதில், நட்டி நட்ராஜ் கங்குவாவிற்கு துரோகம் இழைக்கிறான். இதனால், நூற்றுக்கணக்கான பெருமாச்சி வீரர்கள் பலியாகின்றனர். இந்த உண்மையானது, கருணாஸ் மூலமாக கங்குவாவிற்கு தெரிய வர, நட்டி நட்ராஜை மிக கொடூரமான முறையில் கொலை செய்கிறார். ஆனால், நட்டியின் மகனை (குழந்தையை) காப்பாற்ற நினைக்கிறார். இதனால், ஊர் மக்களின் கோபத்திற்கு ஆளாகி, கங்குவா சூர்யாவுக்கு தனது மண்ணை-ஊரை இழக்க நேரிடுகிறது.

இச்சூழலில் போகும் கதையானது, அப்படியே நிகழ்காலத்திற்கு மாறி வருகிறது. அதே சிறுவன் தற்போது ஜீட்டா சிறுவனாக பிரான்சிஸ் சூர்யா முன் காட்டப்படுகிறான். சிறுவனை, பிரான்சிஸ் சூர்யா காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

ஆக, இப்படி இரண்டு விதமான உலகத்தில் கதையோட்டம் அசுரத்தனமாய் தெறிக்கிறது. அதாவது, கற்காலத்திலும் நிகழ்காலத்திலும் சிறுவனைக் காப்பாற்ற சூர்யா எடுக்கும் மாபெரும் ஆயுதப்புரட்சிதான் கதையின் கரு.

படத்தில், கங்குவா கதாபாத்திரத்திற்காக மிகக் கடினமாய் உழைத்திருக்கிறார் சூர்யா. குறிப்பாக, க்ளைமேக்ஸ் காட்சிகளில் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் அவர் புரியும் சண்டைக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.

நேர்த்தியான திரைக்கதை இல்லாததும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இரைச்சலான பின்னணி இசையும் அதிருப்தி அடையச் செய்கிறது. மற்றபடி.. வெற்றியின் ஒளிப்பதிவு, சுப்ரீம் சுந்தரின் சாகச ஸ்டண்ட்ஸ், விஷூவல் எபெக்ட்ஸ், சிஜெ வொர்க்ஸ், கிராபிக்ஸ் என பிரம்மாண்ட பேண்டஸி எல்லாம் பாராட்டத்தக்கவையே.

முதலையோடு வரும் சண்டைக்காட்சிகள் செம செம செம மிரட்டல். ஆனால், இது கதையோடு ஒட்டவேயில்லை. ‘கங்குவா படம் ரூபாய் 2000 கோடி வசூல் சாதனை படைக்கும்’ என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர்ந்து சொல்லி வந்தார். அதனை தற்போது சொல்வாரா?

மொத்தத்தில், ‘அவதார்’ படம் போல ‘பாகுபலி’ படம் போல என்றெல்லாம் புரமோஷன் பணிகளின்போது அவிழ்த்து விட்டாலும், படத்தை பார்க்கும் திரை ஆர்வலர்களுக்கு படத்தின் தரம் தெரியாதா என்ன.!

தமிழ் சினிமாவில் வரலாற்றுப் பின்னணியில் ஒரு புதிய உலகத்தை உருவாக்க முயன்று, ஏதோ ஜெயித்திருக்கிறார் சிறுத்தை சிவா.

ஆம், மில்லியன் கணக்கில் எதிர்பார்த்த கங்குவா படம்; சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லைதான். இருப்பினும், சூர்யாவின் அதீத கலைத்திறமையை நிச்சயம் ரசிக்கலாம்.!

30%

மொத்தத்தில் மில்லியன் கணக்கில் எதிர்பார்த்த கங்குவா படம்; சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லைதான். இருப்பினும், சூர்யாவின் அதீத கலைத்திறமையை நிச்சயம் ரசிக்கலாம்.!

  • Your Rating