Pushpa 2

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ‘அமரன்’ பட வெற்றி விழா: கமல்ஹாசன் திட்டம்

‘அமரன்’ திரைப்பட வெற்றி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால் படக்குழுவினருக்கு ஷீல்டுகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்..

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலை வரலாற்றுப்படமாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் வார்த்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. படம், மிக மிகச் சிறப்பு என்றால் அது மிகையல்ல.

படத்தில், இந்து ரெபெக்கா வர்கீஸாக நடித்த சாய் பல்லவியும் சிறந்த நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பல பாஸிட்டிவ்வான விமர்சனங்களாலும் படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூலிலும் உலக அளவில் இதுவரை 350 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தெரிவிக்கிறது. மேலும், ‘அமரன்’ படம் தொடர்ந்து வெற்றிகரமாக 25 நாட்களை கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அமரன் படத்தின் சக்சஸ் மீட்டை நடத்துவதற்கு, படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, அந்த வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு சீல்டு வழங்க ‘அமரன்’ படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, முதலமைச்சரிடம் தேதி வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

‘அமரன்’ படம் ரிலீசுக்கு முன்பாக முதன் முதலாக படத்தை பார்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘பிக் சல்யூட்’ என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் என பலரும் ‘அமரன்’ படத்தை பாராட்டினர்.

இந்நிலையில், படத்துக்கு வெற்றி விழாவும் நடைபெறும் பொழுது, பாக்ஸ் ஆபிஸ் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.