‘காவாலா’ பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

இதில் அனிருத் இசையமைத்திருந்த முதல் பாடலான ‘காவாலா’ பாடல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று அனைவராலும் ரீல்ஸ் செய்யப்பட்டு தற்போது வரை இணையதளத்தை அதிர விட்டு வருகிறது. அந்த வகையில், ஜப்பானின் பிரபல youtuber மயோ சன் என்பவருடன் ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அத்துடன், “ரஜினி மீதான அன்பு தொடரும்” என்றும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.