கரூர் துயரச் சம்பவம்: ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் ஒத்திவைப்பு..

தளபதி விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள அரசியல் பேசும் திரைப்படம் ‘ஜனநாயகன்’ இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதன் சிறிய டீஸர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதன் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கரூர் துயரச் சம்பவத்தினால் தற்போது இப்பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தினை முன்வைத்து விஜய்யை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் கைதும் நடைபெற்று வருகிறது. இதனை முன்வைத்தே பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு.
‘ஜனநாயகன்’ படம் விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, கவுதம் மேனன், மமிதா பைஜு உள்பட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
குறிப்பாக ‘ஜனநாயகன்’ படத்தில் அனிருத் இசையில் அனல் பறக்கும் வரிகளுடன் அரசியல் முழக்கமிடும் பிரச்சார பாடலும் இருக்கிறது எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
