கோவையில் இசை நிகழ்ச்சி: இளையராஜா முக்கிய அறிவிப்பு..
கோவையில் நடைபெறவிருக்கும் இசைக் கச்சேரி பற்றி, இளையராஜா அறிவித்துள்ள தகவல் காண்போம்..
இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நிகழ்த்தினார். சுமார் 20 நிமிடங்கள்வரை நிகழ்ந்த தொடர் இசைத்தொகுப்பான சிம்பொனியை அனைவரும் கொண்டாடினர் இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையையும் ராஜா பெற்றார்.
சிம்பொனிக்கு பிறகான தனது முதல் இசை கான்செர்ட்டை கரூரில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். அந்த கச்சேரிக்கு மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது.
மேலும், கோவையில் கடந்த 17-ந்தேதி இசை கச்சேரி நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ச்சூழல் நிலவியதால், இசைக் கச்சேரிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி கோவை இசை கான்செர்ட் ஜூன் 7-ந்தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி வருகிறது. வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. மேலும், இளையராஜா திட்டமிட்டிருக்கும் நாளிலும் மழை பெய்தால், நிலைமை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
இந்நிலையில் இளையராஜா, ‘கோயம்புத்தூரில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். நீங்கள் எல்லாம் இசை நிகழ்ச்சியை மழையில் நனையாமல் கேட்க வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. என்னதான் அடாது மழை பெய்தாலும், எங்களது இசை நிகழ்ச்சி கண்டிப்பாக நடக்கும்’ என தெரிவித்துள்ளார்.
