
13 தேசங்களில் சிம்பொனி நடைபெற இருக்கிறது: சென்னை திரும்பிய இளையராஜா
லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பிய இளையராஜாவின் இசைமொழி காண்போம்..
இசைஞானி இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பினார். இளையராஜா கம்போஸ் செய்த சுமார் 45 நிமிட சிம்பொனி இசையை கேட்ட ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆசியாவிலேயே சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் இளையராஜா.
சிம்பொனியை அரங்கேற்றி முடித்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் இளையராஜா. அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பேசுகையில்,
‘தமிழக அரசு சார்பில் எனக்கு வரவேற்பு அள்ளிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய சிம்பொனி இசையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கேட்கக்கூடாது.
ஏனென்றால், இதை என்னுடைய மக்கள் நேரடியாக கேட்க வேண்டும். நேரடியாக கேட்டால் தான் இதை அனுபவிக்க முடியும். அப்போது 80 வாத்தியக் கருவிகளின் இசையும் உங்களுக்கு கேட்கும். மற்ற ஒலிப்பதிவு கருவிகளில் அதை உங்களால் கேட்க முடியாது.
நான் சிம்பொனி அரங்கேற்றியபோது அங்குள்ள இசைக்கலைஞர்கள் ஏதேனும் தவறு செய்கிறார்களா என்பதை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன். மேலும், இரண்டாவது பகுதியில் என்னுடைய பாடல்களையே அவர்களை வாசிக்க வைத்து, நானும் ஒரு பாடலை அங்கே அவர்களோடு பாடினேன். அதற்கு கைதட்டி நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.
இந்த சிம்பொனி இசை 13 தேசங்களில் நடக்கவிருக்கிறது. வருகிற அக்டோபர் மாதம் துபாயில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளேன். பின்னர் செப்டம்பரில் பாரிஸிலும், அடுத்து ஜெர்மன், ஹேம்பர்க் என உலகளவில் ஸ்பான்சர்கள் புக் செய்துவிட்டார்கள்.
இதை நம் மக்களும் நேரில் கேட்க வேண்டும். என் மீது மக்கள் அவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். தெய்வமாக கொண்டாடுகிறார்கள். கடவுளாக பார்க்கிறார்கள். இசைக்கடவுள் என சொல்கிறார்கள். ஆனால், நான் சாதாரண மனிதனை போலதான் வேலை செய்கிறேன். என்னை இசைக்கடவுள் என சொல்லும்போது எனக்கு தோன்றுவது என்னவென்றால், இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே என்றுதான் தோன்றும்.
82 வயதாகி விட்டது, இனிமேல் என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள், இது ஆரம்பம்தான்’ என்றார்.