Tamil nadu Rain

டெல்லி : அடுத்த 45 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக மிதமான மழையும் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் வரும் அக்.8 வரை பரவலாக மழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு திசையில் நகரும்:

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமண் கரையை நோக்கி நகர கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றம்:

இதன் காரணமாக அரபிக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் , கடல் காற்று பலமாக வீசப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக் கடல் ஆகிய இடங்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

45 நாட்களுக்கு கனமழை :

இந்நிலையில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு ஆகிய இடங்களில் அடுத்த 45 நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது