சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’: ஜி.வி.பிரகாஷ் கம்போஸிங்..
ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘வாடிவாசல்’ பட பணிகள் இன்று தொடங்கியது. இது குறித்த அப்டேட் காண்போம்..
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் கடந்த சில ஆண்டுகளாகவே தாமதமாகி வந்தது.
இந்நிலையில், ‘விடுதலை-2’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இந்த படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என்கிற முனைப்புடன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து படத்திற்கு தேவையான பாடல்களை உருவாக்கும் பணிகளை இன்று தொடங்கியுள்ளார்.
இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி. பிரகாஷ்குமார் ‘வாடிவாசல்’ படத்தின் கம்போஸிங் பணிகள் தொடங்கி விட்டன என்ற அப்டேட்டை கொடுத்து சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள ‘கிங்ஸ்டன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு கூடச் செல்லாமல் ஜி.வி. பிரகாஷ் ‘வாடிவாசல்’ படத்தின் இசை பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டாரே என அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குட் பேட் அக்லி, இட்லி கடை என அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் படங்களுக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
‘வாடிவாசல்’ கதை சி.சு. செல்லப்பா எழுதிய நாவல் ஆகும். இதன் உரிமையை வெற்றிமாறன் பெற்று, திரைப்படம் ஆக்குகிறார்.
