ரெண்டு ஆப்ஷன் குட்டா? பேடா? குட் பேக் அக்லி: திரை விமர்சனம்

நல்லவனா வாழ்ந்த கடைசிவரை நல்லவனாதான் வாழணும். ஆனா, நல்லாவே வாழமுடியாது போல. ஏன்னா, நடப்பது கலிகாலம். சரி, விஷயத்திற்கு வருவோம்..

மகனைக் காப்பாற்றவும் பகைவர்களை பழிவாங்கவும் ஓவர் ரிவெஞ்ச் எடுத்திருக்கும் ரெட் டிராகன்தான் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தை, முழுக்க முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி ஒரு ஃபேன் பாயாக தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது ‘குட்’ ஆக எழுந்ததா? ‘பேட்’ ஆக விழுந்ததா? என பார்ப்போம்…

இமாலய கேங்ஸ்டரான அஜித் தன் மனைவி திரிஷா சொன்னதற்காக, போலீஸில் சரண்டராகி 17ஆண்டுகள் ஜெயிலில் கழிக்கிறார்.

இந்நிலையில், அஜித் தன் மகன் விஹானின் 18-வது பிறந்த நாளை கொண்டாட ஜெயிலரின் அனுமதியோடு வெளியே வருகிறார். அப்போது, பழைய பகையாளியான அர்ஜுன்தாஸ் அவரது மகனை கடத்திச் சென்று, போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க, விஹான் ஜெயிலுக்கு செல்கிறார். இது குறித்த நிகழ்வுகளை திரிஷா சொல்ல, அஜித் ஆக்ரோஷமாகிறார்.

இதில், அர்ஜுன் தாஸ் ஏன் அஜித் மகனை ஜெயிலுக்குள் அனுப்பினார்? மகனை ஜெயிலிலிருந்து அஜித் மீட்டாரா? என நான்ஸ்டாப் சரவெடியாய் ஜிகேயூ மீதிக்கதை தாறுமாறாய் போய் முடிகிறது.

அதாவது மகனுக்காக ‘குட்’ அப்பாவாக வாழ எண்ணிய அஜித், மீண்டும் ‘பேட்’ கேங்ஸ்டராக மாறி வருகிறார். இதான்ங்க ஒன்லைன்..

முதல் பாதியில் மட்டுமல்ல, இரண்டாம் பாதியிலும் “சம்பவம்” மட்டும்தான் நிறைந்திருக்கிறது. இதில், தல ரசிகர்கள் கொண்டாடிய சீன்களின் பட்டியல் சில காண்போம்..

* ‘காட் பிளஸ் யூ’ பாடலில் ஏகே வின் டான்ஸ் அப்ளாஸ்.., ஒன்ஸ்மோர்..

* ‘உனக்கு ரெண்டு ஆப்ஷன் தாரேன், பேங்க்கா? மொட்டையா?’ என அர்ஜுன்தாஸிடம் கேட்கும் ஏகேவின் ரகள…

* ‘இளமை இதோ இதோ.. இனிமை இதோ இதோ..’ என்ற பாடலின் பின்னணியில் அமர்க்களப்படுத்தும் ஏகே ஃபைட் மற்றும் மாஸான கார் சேஸிங்..

* ‘வாலி’ பட ப்ரியா கேரக்டரின் தொடர்ச்சியாக வரும் சிம்ரன், அஜித்திடம் முத்தம் கேட்பது; அதற்கு திரிஷா ‘லேசா லேசா’ என சிணுங்குவது..

* போட்டோஷுட் எடுக்கப் போவதாகச் சொல்லி, ரவுடிக்கும்பலை வரிசையாக அமர்த்திய ஏகே, நூற்றுக்கணக்கான தோட்டக்களால் நிமிடத்தில் காலி செய்வது..

* ஏகே ஆக்டிவிட்டிஸ், முந்தைய படங்களின் ரெஃபரென்ஸ், மாஸ் டயலாக், கோட் சூட்டில் ஸ்லோமோஷன் வாக்.. என்பவை ரசிக்கப்படுகின்றன.

இப்படியெல்லாம் தீப்பொறி பறக்கிற படத்தில் பிரபு, பிரசன்னாவும் பெயரளவிற்கு இருக்கிறார்கள். அஜித் மகனாக நடித்திருக்கும் கார்த்திகேயா நன்றாக பொருந்தியிருக்கிறார்.பிரியா வாரியர் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாட்டுக்காக கமிட்டாகி இருக்கிறார் போலும்.

இரட்டை வேடங்களில் வரும் அர்ஜுன் தாஸ் ஏகேவை எதிர்க்கும் மெகா வில்லனாக கர்ஜிக்கிறார். ஆனால், மிரட்டலாகவே இல்லை. இருந்தாலும் ‘ஒத்த ரூபா தாரேன்’ என்ற பாட்டுக்கு ஆட்டம் போட்டிருப்பதால், பரவாயில்லை எனலாம்.

ஃபேமிலி ஆடியன்ஸும் தியேட்டருக்கு வரவேண்டும் என்கிற ரீதியில் ஏதேதோ சில சென்டிமென்ட் டச்அப் ஊறுகாயாக தொடப்பட்டிருக்கிறது.

சுருக்கமாக, கதையே இல்லாத ஒரு பெரிய கதைப்பில் ஏகப்பட்ட எமோஷன் கொஞ்சமும் கனெக்ட் ஆகவில்லை. ஏனெனில், இங்கே திரைக்கதை என்பதே ‘நோ லாஜிக் ஒன்லி மேஜிக்தானே.!

இதில், கொதித்துச் சுழற்றி கேமரா பிடித்திருக்கிறார் அபிநந்தன். ரசிகர்கள் குதித்து ஆட மியூசிக் போட்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

மொத்தத்தில், ரசிகர்களை குறி வைத்து ஆர்ப்பரிக்கிற அக்லி எப்படி என்றால்.. கொஞ்சம் ‘குட்’ கொஞ்சம் ‘பேட்’ என்ற பெருமூச்சுகளே விடைகளாக வருகின்றன.

70%

குட் பேக் அக்லி திரை விமர்சனம்

  • Rating