வைரமுத்து நல்ல மனிதர் கிடையாது: கங்கை அமரன் தாக்கு

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ என்கிற பாடலை சின்மயி பாடிய பின், தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் பெறத் தொடங்கினார்.

சின்மயி பாடுவதற்கு ஏன் தடைவிதிக்கப்பட்டது? என்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், சின்மயியுடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அவரிடம் வைரமுத்து மீது சின்மயி வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கங்கை அமரன்,

‘வைரமுத்து தங்கமான ஆளு அவரை ஏன்மா இப்படி தவறா பேசுற? அவர் மீது நீ குற்றம் சொல்லலாமா? அவர் ஒரு உத்தமமான ஆளு, அதிசய பிறவியான ஆளு என்று நக்கலாகக் கூறினார்.

வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர் நல்ல மனிதர் கிடையாது என்று கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கிப் பேசினார். நாங்கள் எல்லாம் நண்பர்கள்தான். ஆனால், நண்பர் என்பதற்காக அவர் செய்த தவறுகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியுமா? ஒரு பெண் தனக்கு நடந்த பிரச்சினைகளை பேசும்போது, அதற்கு ஆதரவாகத்தான் பேச முடியும்.

சின்மயி பின்னணி பாடகியாக ஆவதற்கும், இந்தத் துறையில் வளர்வதற்கும் மிகுந்த கஷ்டப்பட்டுள்ளார். பின்னர், தனக்கு நடந்த அசிங்கத்தை வெளியில் சொன்ன பின்னர், அவள் வாழ்க்கையில் மிக கஷ்டம். அநியாயத்தை கேட்பதற்கு ஒரு பெண் தயாராக இருக்கிறாரே அவருக்கு ஆதரவாக இருப்பதற்கு நான் எப்போதும் தயார்’ எனப் பேசினார்.

அவரின் இந்த காணொளி இணையத்தில் வைரலாக தொடங்கிய நிலையில், பலரும் கங்கை அமரனை விமர்சித்து வருகின்றனர். காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு இடையில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது.

கவிஞர் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாக சாடி பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்த விவகாரத்தில் இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனும் வைரமுத்துவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். தற்போது, அந்தப் பிரச்சினையை மனதில் கொண்டே சின்மயிக்கு ஆதரவாக கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

gangai amaran criticize vairamuthu on chinmayi issue