700 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம்; கதை பற்றி லிங்குசாமி வாய்ஸ்

மகாபாரத “அர்ஜூனன்-அபிமன்யு” கதையை லிங்குசாமி எடுக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 20 வருட கனவுப்படமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தை 2 பாகமாக எடுத்து முடித்தார்.

ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகமே பாக்ஸ் ஆபிசில் ரூ.500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது பாகம் ரூ.350 கோடி வசூல் செய்தது.

இதேபோல், வரலாறு மற்றும் ஃபேண்டஸி கதையம்சத்துடன் ‘கங்குவா’ படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ‘கங்குவா’ வொர்க் சிறப்பு என்றாலும், முதல் அரைமணி நேர தொய்வு மற்றும் பேக் கிரவுண்ட் இரைச்சல் போன்ற நெகட்டிவ் காரணங்களால், பெரிய தோல்வியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரூ.700 கோடியில் புதிய படம் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

‘ஆனந்தம் ‘படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி, தற்போது ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் மாதவன் நடிப்பில் ‘ரன், அஜித் நடிப்பில் ‘ஜி, விஷால் நடிப்பில் சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், தி வாரியர் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். கடைசியாக தமிழ் சினிமாவில் சண்டக்கோழி-2 படத்தை இயக்கினார். அவருக்கு இப்படம் எதிர்பார்த்த வெற்றியாக அமையவில்லை.

தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் புதிய படம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.700 கோடி. இந்த படம் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என இரு பாகங்களாக உருவாகிறது. இதுகுறித்து லிங்குசாமி,

‘அர்ஜூனன் மற்றும் அபிமன்யு ஆகிய 2 கதாபாத்திரங்களை வைத்து 2 பாகமாக ஒரு படம் இயக்க இருக்கிறேன். இந்தப் படத்திற்கு பட்ஜெட் ரூ.700 கோடி. புதிய தொழில்நுட்பங்களுடன் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

ஏற்கனவே, மகாபாரதம் தொடர்பான சீரியல்கள் வந்தாலும் அர்ஜூனன் மற்றும் அபிமன்யுவின் கதையை மையப்படுத்தி தனித்தனி படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது’ என கூறியுள்ளார். ‘எண்ணுவ துயர்வு’ என்பதுபோல, லிங்குவின் எண்ணத்திற்கு உயர்ந்த வெற்றி எட்டட்டும்!