துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து கௌதம் மேனன் கூறியுள்ள அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பொன்னியன் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. சில காரணங்களால் தள்ளி போன இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த படக்குழு இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் டிரைலரை வருகிற ஜூன் 17-ந் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியின் போது வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், துருவ நட்சத்திரம் திரைப்படத்தை நான் எடுத்து முடித்து விட்டேன் இப்போது நான் இப்படத்தின் தயாரிப்பாளர். இப்படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகி விடும். இதன் ட்ரெய்லரும் வரும் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.