களை எடுக்கிறேன், பயிர் தனியாக தெரிகிறது: நடிகர்கள் குறித்து இயக்குனர் பாலா
இந்திய திரையில், தனித்த முத்திரையுடன் பிரபலமானவர் இயக்குனர் பாலா. பிதாமகன், நான் கடவுள் படத்துக்காக தேசிய விருதினை வென்றவர். பல நடிகர்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர்.
முன்னதாக, பாலாவிடம் நடிகர் விக்ரம் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தன்னுடைய மகன் துருவ் ஹீரோவாக நடிக்க, ரீமேக் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பாலாவும் தனது கொள்கையிலிருந்து விலகி, முதன்முறையாக ரீமேக் செய்ய உருவான ‘வர்மா’ படம் விக்ரமுக்கு பிடிக்காததால், வேறொரு இயக்குனரால் ‘ஆதித்ய வர்மா’ எடுக்கப்பட்டு ரிலீஸாகி தோல்வி அடைந்தது.
இதனையடுத்து, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை தொடங்கினார் பாலா. ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்தில் சூர்யாவும், பாலாவும் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அருண் விஜய்யை வைத்து படத்தை முடித்து, வருகிற10-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், புரொமோஷன் பணிகள் பரபரப்பாய் நிகழும் சூழலில் பாலா கூறியதாவது: ‘நான் மணிரத்னமோ, ஷங்கரோ கிடையாது. பெரிய டெக்னீஷியனும் இல்லை. நான் என்பவன் ஒரு கதை, வசனகர்த்தா அவ்வளவுதான்.
நடிகர்களை நான் பெரிதாக நடிக்க வைப்பதில்லை. எந்த நடிகருக்கும் புதிதாக நான் எதையும் சொல்லிக் கொடுப்பதுமில்லை. பாதை போட்டேன் என்றும் பெருமைப்பட்டதில்லை. அவர்களின் குறையை நிவர்த்தி செய்து, களை எடுக்கிறேன். அதனால், பயிர் தனியாக தெரிகிறது’ என்றார்.