சம்பந்தப்பட்டவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..

Web Ads

நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற புகைப்படம் வலைதளத்தில் வெளியானது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் புனித நீராடி இருக்கிறீர்களே? உங்களை என்ன சொல்வது? என்று கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது. புகைப்படம் குறித்த உண்மை அறிய சஜக் குழு விசாரணையில் இறங்கியது.

கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட தொடர்புடைய கீ வேர்டுகளுடன் கூகுளில் தேடியபோது, அதுகுறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. பிரகாஷ் ராஜின் சமூக வலைதளப் பக்கங்களிலும் அதுபோன்ற எந்த புகைப்படமும் காணக் கிடைக்கவில்லை.

பிரகாஷ் ராஜ் கும்பமேளாவிற்கு சென்றது போன்ற படம் ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் சஜக் குழுவுக்கு எழுந்தது. இதனையடுத்து, ஏஐ படங்களைக் கண்டறியும் sightengine.com மூலம் படத்தை முதலில் சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் வைரல் புகைப்படம் ஏஐ-யால் உருவாக்கப்பட்டதாக இருக்க 98 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக காட்டின.

மற்றொரு ஏஐ கண்டறியும் இணையதளமான Hive Moderation-ல் வைரல் புகைப்படத்தை உள்ளிடப்பட்டது. அதுவும் புகைப்படம் 99.9 சதவிகிதம் ஏஐயால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற முடிவைத் தந்தது.

ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்கள் கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடுவது போன்ற ஏஐ உருவாக்கப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்த ஆதாரங்கள் மூலம் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் கலந்துகொண்டது போன்ற புகைப்படம் ஏஐயால் உருவாக்கப்பட்டது என சஜக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் கூறும்போது, ‘போலி தகவல் எச்சரிக்கை. இப்படி போலி புகைப்படம் வெளியிட்டு இருப்பது வெட்கக்கேடு. இது குறித்து புகார் செய்து இருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.